மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி; பசவராஜ் பொம்மை மீண்டும் திட்டவட்டம்


மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி; பசவராஜ் பொம்மை மீண்டும் திட்டவட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 9:00 PM GMT (Updated: 2021-08-06T02:30:58+05:30)

மேகதாது திட்ட விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை பற்றி கவலைப்படவில்லை என்றும், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பெங்களூரு: மேகதாது திட்ட விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை பற்றி கவலைப்படவில்லை என்றும், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். 

மேகதாது அணை திட்டம்

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் தான் இந்த அணை அமைக்கப்பட உள்ளது. 

இந்த திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. மேலும் இந்த புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அனுமதி கோரி கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

தமிழக பா.ஜனதா உண்ணாவிரதம்

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களும் மத்திய அரசிடம், தங்கள் தரப்பு நியாயத்தை கடிதமாக வழங்கியுள்ளன. புதிய அணை கட்ட அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசும் வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக பா.ஜனதா சார்பில் நேற்று தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் நிலையில், அக்கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழக பா.ஜனதா கட்சி அந்த அணை திட்டத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமரசத்திற்கு இடம் இல்லை

இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது திட்டத்தில் சமரசத்திற்கு இடம் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக அணை கட்டுவதை எதிர்க்கிறார்கள். இந்த அணை குடிநீர் மற்றும் மின் உற்பத்தி திட்டத்திற்காக கட்டப்படுகிறது. வறட்சி காலத்தில் அந்த நீரை பகிர்ந்துகொள்ள முடியும்.
மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

அணை கட்டுவது உறுதி 

கர்நாடக எம்.பி.க்கள் குழுவும் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளது. மத்திய அரசு விரைவில் அணை கட்ட அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் நாங்கள் மேகதாதுவில் புதிய அணையை கட்டுவது உறுதி. 

எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அங்கு போராட்டம் நடத்துபவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதை நாங்கள் மனதில் கொள்வது இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

பசவராஜ் பொம்மை கடந்த 28-ந்தேதி கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கூறியிருந்தார். தற்போது அதே கருத்தை அவர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story