நெல்லையில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்
நெல்லையில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
தமிழகத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டம் நேற்று செயல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்திலும் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா பாளையங்கோட்டை கக்கன் நகரில் நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவு, நடமாடும் மருத்துவ குழு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கக்கன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மருத்துவ குழுவினருடன் சபாநாயகர் சென்று மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
முதல் கட்டமாக நெல்லை மாநகர் மற்றும் ராதாபுரம் பகுதியில் நேற்று தலா 1 மருத்துவ குழு வாகனம் செயல்பட தொடங்கியது. தொடர்ந்து மாநகராட்சி மண்டல அளவிலும், மாவட்டத்தில் வட்டார அளவிலும் மருத்துவ வாகனங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த குழுவினர் வீடு தோறும் சென்று உடல் நலம் குன்றியவர்கள் இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பார்கள். அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சமூகரெங்கபுரத்திலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story