மக்களை தேடி மருத்துவம் திட்டம்
காரியாபட்டி அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
புதிய திட்டம்
காரியாபட்டி தாலுகா அயன்ரெட்டியபட்டி துணை சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அயன் ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று மருந்துகளை கலெக்டர் வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம் உள்ளடக்கிய மருத்துவ சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், மல்லாங்கிணறு பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story