ஆடிமாத 3 வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத 3 வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
தர்மபுரி:
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமை நாட்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பூ பந்தல் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், உழவர்தெரு மாரியம்மன்- செல்லியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோன்று கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
புத்து கோவில்
காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளியில் தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தர்மபுரி இலக்கியம்பட்டியில் உள்ள புத்து கோவிலில் ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோன்று பென்னாகரம், பாலக்கோடு, அரூர், மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, ஏரியூர், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பூவாடைக்காரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Related Tags :
Next Story