ஓசூரில் கடன் தொல்லையால் விபரீதம் மனைவி மகள் தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


ஓசூரில் கடன் தொல்லையால் விபரீதம் மனைவி மகள் தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 6 Aug 2021 4:19 PM GMT (Updated: 2021-08-06T21:49:55+05:30)

ஓசூரில் கடன் தொல்லையால் மனைவி மகள் தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

மத்திகிரி:
ஓசூரில் கடன் தொல்லையால் மனைவி, மகள், தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொழில் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சுவர்ணபூமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (வயது 39), தொழில் அதிபர். இவருடைய மனைவி ரம்யா (33). மகள் அன்மயா (8), தாய் வசந்தம்மா (65). இவர்கள் அனைவரும் ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று காலையில் மோகனின் வீடு திறக்கப்படாமல் நீண்ட நேரமாக பூட்டி இருந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அவர்கள், மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து உடல்கள்
இதைத்தொடர்ந்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோகனின் வீட்டுக்கதவை தட்டி பார்த்தனர். வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மோகனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். செல்போன் நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே போலீசார் மோகனின் வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவி வாங்கி வந்து கதவை திறந்தனர்.கதவை திறந்தவுடன் அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.   
அதாவது, வீட்டின் கீழ்தளத்தில் மோகனின் தாய் வசந்தம்மா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். தொடர்ந்து போலீசார் வீட்டின் மாடிப்பகுதிக்கு சென்றனர். அங்கு படுக்கை அறையில் கட்டிலில் ரம்யா, அவருடைய குழந்தை அன்மயா ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர். கட்டிலுக்கு அருகில் தரையில் மோகன் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டப்பட்டு இருந்தது. ஒரே வீட்டுக்குள் இப்படி அடுத்தடுத்து கிடந்த உடல்களை கண்டு போலீசார் திகைத்தனர்.
உருக்கமான கடிதம் சிக்கியது 
இதுபற்றி அவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி விரைந்து வந்து  உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அந்த வீட்டில் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மோகன் கைப்பட எழுதி இருந்த உருக்கமான கடிதம் ஒன்று படுக்கை அறையில் உள்ள மேஜையின் மீது இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து 4 பேரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
வசதியான வாழ்க்கை
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
மோகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கப்பன் நகர் பகுதி. கிருஷ்ணகிரியில் கே தியேட்டர் சாலையில் அவர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். மேலும் ஆன்லைனில் சில வியாபாரங்களும் செய்து வந்துள்ளார். தொழில் அதிபரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கும் விடுதியை விற்றுள்ளார்.
அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததாக தெரிகிறது. அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதன்மூலம் கிடைத்த வட்டி பணத்தில் தனது குடும்பத்தினருடன் வசதியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால் அதில் போதிய வருமானம் இல்லாமல் அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
கடனில் வாழ முடியாது
இதற்கிடையே வீட்டு உரிமையாளர் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். புதிய உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி மோகனிடம் கூறியுள்ளார். கடன் ஒரு பக்கம், வாடகைக்கு புதிய வீடு பார்க்க வேண்டும். அதற்கு முன்பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்ற வேதனையில் மோகன் இருந்துள்ளார்.
அதைத்தொடர்ந்தே வசதியான வாழ்க்கை வாழ்ந்த நாம், இனி கடனில் இந்த உலகில் வாழ முடியாது என்ற முடிவுக்கு மோகன் வந்துள்ளதாக தெரிகிறது. தான் மட்டும் தற்கொலை செய்து கொள்ள கூடாது. தன்னுடைய குடும்பம் கஷ்டப்படும். எனவே அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
இறந்தது எப்படி?
கடன் பிரச்சினையால் மோகன் உள்பட குடும்பத்தினர் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது. ஆனால் மோகனின் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டப்பட்டு இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தற்கொலை செய்து கொள்வதற்கு மனைவி, மகள், தாய் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து அவர்களுக்கு விஷம் கொடுத்து விட்டு அதன்பிறகு இவர், பிளாஸ்டிக் கவரை முகத்தில் கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் துடிதுடித்து இறந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story