அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Aug 2021 5:21 PM GMT (Updated: 2021-08-06T22:51:48+05:30)

ஆடி 3-ம் வெள்ளிக் கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் குவிந்ததால் 2 கோவில்கள் மூடப்பட்டன.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் ஆடி 3-ம் வெள்ளி மற்றும் ஆடி அமாவாசையையொட்டி 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதோடு, கோவிலில் சாமிக்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகளை தடையின்றி செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் இன்றி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை 9 மணியளவில் பூந்தோட்டம் ஏரிக்கரையில் சக்தி கரகம் ஜோடித்து வருதலும், பகல் 12 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தலும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள், கோவிலுக்கு வெளியே நின்று முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கும்பம் கொட்டுதலும், இரவு 7 மணிக்கு உற்சவர் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை, ஆராதனையும் நடைபெற்றது.

ஏழை மாரியம்மன்

விழுப்புரம் எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக             ஆராதனையும், 9 மணிக்கு விழுப்புரம் பாப்பான் குளக்கரையில் கரகம் ஜோடித்து வீதிவலம் வந்து மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 8 மணியளவில் அம்மனுக்கு கும்பம் படைத்தலும் நடந்தது.
இதேபோல் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் அருகில் உள்ள முத்துமாரியம்மன், நாப்பாளைய தெருவில் உள்ள சண்டபிரசண்ட மாரியம்மன், மருதூர் மாரியம்மன், கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன், பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன், மாம்பழப்பட்டு முத்துமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்கள் குவிந்ததால்... 

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் மற்றும் முண்டியம்பாக்கம் பச்சைவாழியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வம் என்பதால் 2 கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர். மேலும் கோவில் வளாகத்திலேயே பொங்கல் வைத்தனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 
இது பற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் தமிழ்செல்வி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஆம்ஸ்டிராங், கிராம நிர்வாக அலுவலர்கள் பால்ராஜ், ராஜேஷ்பாண்டியன், மலையப்பன் ஆகியோர் நேரில் சென்று கோவில்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

2 கோவில்கள் மூடல் 

அப்போது பக்தர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு தாசில்தார் தமிழ்செல்வி உத்தரவிட்டார். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் கோவிலை விட்டு வெளியேறினர். இனி வரும் 2 வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது எனவும், தற்போது உடனடியாக கோவில்களை மூடவும் தாசில்தார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 கோவில்களும் மூடப்பட்டது. 

Next Story