தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி


தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 6 Aug 2021 10:54 PM IST (Updated: 6 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு வாகனம் தயார் செய்யப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகனத்தை நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தாய்ப்பால் வார விழா பற்றிய துண்டு பிரசுரத்தை வழங்கினார். இந்த சிறப்பு வாகனம் பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்பெரும்பாக்கம், அரசமங்கலம், சிறுவந்தாடு, கோட்டக்குப்பம், மயிலம், ராதாபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக சென்றடைந்தது.

பேரணி

இதன் தொடர்ச்சியாக அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியையும் கலெக்டர் டி.மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

இதனை தொடர்ந்து விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வயது தளர்வு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து மாற்றுத்திறனுள்ள மாணவர்களுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பெருமாள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story