ஆற்காடு நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.6 லட்சத்தை எடுத்து சென்ற மர்ம நபர்கள்
ஆற்காட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் பேல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து சென்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆற்காடு
வருமானவரித்துறை அதிகாரிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு 1-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் என்ற ஆட்டோ கண்ணன் (வயது 52). இவர் ஆற்காட்டில் ஆட்டோ பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். மேலும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயலாளராகவும் உள்ளார்.
கடந்த மாதம் 30-ந் தேதி மதியம் இவரது வீட்டுக்கு ஒரு சொகுசு கார் வந்துள்ளது. அதில் 5 ஆண்கள், ஒரு பெண் என 6 நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டு அனைவரது செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
மிரட்டினர்
பின்னர் வீட்டில் இருந்த அனைவரையும் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு, ஆட்டோ கண்ணனிடம் அவர் ஒழுங்காக வருமான வரி செலுத்தவில்லை எனக்கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு கண்ணன் நான் வருடத்திற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தி வருகிறேன். அதற்கான ஆவணமும் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.
அந்த ஆவணத்தை நான் காட்ட தயாராக உள்ளேன் என கூறியதற்கு சொகுசு காரில் வந்த அந்த 6 நபர்களும் ஏற்கத் தயாராக இல்லை. வீட்டை நாங்கள் சோதனை செய்ய வேண்டும், இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் உங்கள் அனைவரையும் வெளியே வராதபடி ஜெயிலில் போட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
ரூ.6 லட்சத்தை எடுத்து சென்றனர்
பின்னர் வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ரூ.6 லட்சத்தை வருமான வரித்துறையினர் எனக்கூறிய நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து விசாரணை செய்ததில் சொகுசு காரில் வந்த 6 பேரும் அதிகாரிகள் இல்லை என்பதும், அதிகாரிகள் என்று கூறி பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து செல்வகுமார் என்ற ஆட்டோ கண்ணன் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரின் பதிவு எண் போலியானது என்றும், அது ஒரு மோட்டார் சைக்கிளின் பதிவு எண் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story