3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கலவை
கலவையை அடுத்த சிறுவிடாகம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரர்கள் குமரன், தமிழ்ச்செல்வன் மற்றும் கலவை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கலவையில் இருந்து சென்னசமுத்திரம் செல்லும் சாலை நோக்கி அதிவேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தும்படி சைகை செய்தனர்.
போலீசாரை கண்டதும் வேனை டிரைவர்கள் சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு கீேழ குதித்து ஓட்டம்பிடித்தனர். போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில் அதில் இருந்த 100 வெள்ளைகளில் தலா 35 லிட்டர் வீதம் எரிசாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மொத்தம் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை சரக்கு வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகன பதிவு எண் சேலம் என்பதாலும் வாகனம் பிடிபட்ட பகுதி காஞ்சீபுரம் செல்லும் கிராம குறுகிய சாலை என்பதாலும் சேலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கோ அல்லது சென்னைக்கோ இரவு நேரங்களில் எரிசாராயம் கடத்த முயற்சி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக தப்பி ஓடிய இருவர் குறித்து விசாரணை செய்து அவர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story