திருப்பத்தூரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி
திருப்பத்தூரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.ஜி., டி.ஐ.ஜி. கலந்துகொண்டனர்
திருப்பத்தூர்
நக்சலைட்டுகள் தாக்குதல்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 1980-ம் ஆண்டுகளில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைதொடர்ந்து, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நக்சலைட்டுகளை கைது செய்ய அப்போதைய வடஆற்காடு டி.ஐ.ஜி.யாக இருந்த வால்டர் தேவாரத்துக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து வால்டர் தேவாரம் தலைமையில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நக்சல் கும்பலை காவல் துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வாகனத்தில் அழைத்து வரும்போது குண்டு வீசப்பட்டு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு முருகேசன், யேசுதாஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட போலீசாரின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 4 போலீசாருக்கு திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 41-வது ஆண்டாக நேற்று நினைவுஅஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
போலீசார் மூன்று முறை வானத்தை நோக்கி 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, கியூ பிராஞ்ச் போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், எம்.எல்.ஏ.க்கள் ஏ. நல்லதம்பி, க.தேவராஜ், சப்- கலெக்டர் அலர்மேல்மங்கை, திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட போலீஸ் அதிகாரிகள், பொது மக்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
வால்டர் தேவாரம்
ஓய்வுபெற்ற டி.ஜி.பி. வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, இருப்பினும் காணொலி காட்சி மூலம் அவர் பேசினார். அப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போதும் நக்சலைட் ஊடுருவல் காணப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நக்சலைட் ஊடுருவல் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தாலும் தமிழக காவல் துறையினர் மாநில எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட வேண்டும். தமிழகத்தை எப்போதும் அமைதி பூங்காவாக வைத்திருக்க காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story