இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்
இந்து முன்னணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலையில் உள்ள மூர்த்தி விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணியினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராம பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், சிலை அமைக்க வேண்டும், அவர் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நட்சத்திர தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. எனவே தொடர்ந்து ராஜேந்திர சோழனின் புகழை மறைக்கும் வகையில் செயல்படும் தமிழக அரசை கண்டிப்பதாக கூறி, இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது கோரிக்கைகள் தொடர்பாக, அரசு உறுதி அளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்து இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்து முன்னணியினர் நாங்கள் இதுவரை 4 முறை போராட்டம் நடத்தியும், பலமுறை மனு அளித்தும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை இல்லை. எனவே உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என்றனர். ேமலும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி கொடுத்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிட முடியும் என்றனர்.
இந்நிலையில் அவர்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அய்யம்பெருமாள், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ், நகர துணைத் தலைவர் பாண்டியன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story