சினிமா பாணியில், கன்டெய்னர் லாரியை வழிமறித்து ரூ.6½ கோடி செல்போன்கள் கொள்ளை


சினிமா பாணியில், கன்டெய்னர் லாரியை வழிமறித்து ரூ.6½ கோடி செல்போன்கள் கொள்ளை
x
தினத்தந்தி 7 Aug 2021 3:14 AM IST (Updated: 7 Aug 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

கோலார் அருகே, சினிமா பாணியில் காரில் வந்த மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை வழிமறித்து ரூ.6½ கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.

கோலார்: கோலார் அருகே, சினிமா பாணியில் காரில் வந்த மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை வழிமறித்து ரூ.6½ கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. 

ரெட்மீ செல்போன்கள்

தமிழ்நாடு காஞ்சீபுரத்தில் ரெட்மீ தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் செயல்பட்டு வரும் அந்நிறுவன குடோனுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. அந்த கன்டெய்னர் லாரி பெங்களூருவில் செயல்பட்டு வரும் தனியார் லாரி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அந்த லாரியில் டிரைவராக சுரேஷ் இருந்தார். கிளீனராக ஒரு வாலிபர் இருந்தார். 

அவர்கள் லாரியில் செல்போன்களை ஏற்றிக் கொண்டு காஞ்சீபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வழியாக பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா தேவரசமுத்ரா பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த லாரியை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார், லாரியை முந்திச்செல்ல முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சிக்னல் கேட்டது. 

ரூ.6½ கோடி செல்போன்கள் கொள்ளை

இதையடுத்து அந்த காருக்கு, லாரி டிரைவர் சுரேஷ் வழிவிட்டார். அப்போது அந்த கார், லாரியை முந்திச்சென்றது. பின்னர் திடீரென அந்த கார், லாரியை வழிமறித்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சுரேஷ், லாரியை நிறுத்தினார். அப்போது காரில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இறங்கியது. அந்த கும்பல் லாரி டிரைவர் சுரேசையும், கிளீனரையும் கத்தி முனையில் மிரட்டி பயங்கரமாக தாக்கியது.

 பின்னர் அவர்களின் கை, கால்களை அந்த கும்பல் கட்டிப்போட்டது. 
அதையடுத்து அந்த கும்பல் லாரியில் இருந்து ரூ.6½ கோடி மதிப்பிலான செல்போன்களை திருடி மற்றொரு லாரியைக் கொண்டு வந்து ஏற்றியது. பின்னர் அந்த லாரியை அக்கும்பல் அனுப்பி வைத்துவிட்டது. 

காரில் தப்பிச்சென்ற கும்பல்

அதையடுத்து அந்த கும்பலில் 2 பேர் மட்டும், செல்போன்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் டிரைவர் சுரேசையும், கிளீனரையும் அடித்து, உதைத்து ஏற்றி கோலார் அருகே நேரனஹள்ளி கிராமத்திற்கு லாரியை ஓட்டி வந்தனர். அவர்களை தொடர்ந்து மற்ற நபர்கள் காரில் பின்தொடர்ந்து வந்தனர். நேரனஹள்ளி கிராமம் அருகே வந்ததும் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் சுரேசையும், கிளீனரையும் மரத்தில் அந்த கும்பல் கட்டிப்போட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தங்களது காரில் தப்பிச் சென்றுவிட்டது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவ்வழியாக வந்த அப்பகுதி மக்கள் டிரைவர் மற்றும் கிளீனர் மரத்தில் கட்டிப்போடப்பட்டு இருப்பதையும், கன்டெய்னர் லாரியில் இருந்து செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு

பின்னர் அவர்கள் இதுபற்றி முல்பாகல் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர் சுரேசையும், கிளீனரையும் மீட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி போலீசார் கொள்ளை சம்பவம் பற்றி அறிந்து கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளை கும்பலையும் வலைவீசி தேடிவருகிறார்கள். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story