உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் நடந்தது


உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் நடந்தது
x
தினத்தந்தி 7 Aug 2021 9:51 AM IST (Updated: 7 Aug 2021 9:51 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் நடந்தது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மாநில ஊரக பயிற்சி நிலையத்தில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் 2021 செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப்பணிகள் குறித்த மண்டல ஆய்வுகூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் (ஓய்வு) தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் 359 கிராம ஊராட்சிகளாகவும், 8 ஊராட்சி ஒன்றியங்களும், 359 கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 679 கிராம ஊராட்சி வார்டுகளும், 8 ஊராட்சி ஒன்றியங்களில் 154 ஊராட்சி ஒன்றிய வார்டுகளாகவும், ஒரு மாவட்ட ஊராட்சியில் 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக உள்ளாட்சி வார்டுகளுக்கும் மறுசீரமைக்கப்பட்ட எல்லைகள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 2 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு 8 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 28 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 8 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 63 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 359 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

20.1.2021 மற்றும் 19.3.2021-ல் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, மறு சீரமைக்கப்பட்ட வார்டு எல்லைக்குட்பட்டு, வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கை தயார் செய்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊரக உள்ளாட்சி தேர்தல் கையேடு-1-ல் கண்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 5.8.2021 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி 7. 8.2021 நாளன்று நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான, குடிநீர், சுகாதார வசதி, மின்சார வசதி, கதவு ஜன்னல்கள், சாய்தள வசதி போன்றவற்றை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவும், ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும் மீண்டும் ஒரு முறை அனைத்து பெட்டிகளையும் இயக்கி தயார் நிலையில் வைத்து கொள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.செல்வகுமார், காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) அருண்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story