குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாய்ப்பால் வார விழா
மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தாய்க்கும் - சேய்க்கும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
குழந்தையின் முதல் 1,000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்தக் குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த 1,000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தவறாது தாய்ப்பால் அளிக்க வேண்டும். 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். 5-வது மாதம் முதல் தாய்ப்பாலுடன், துணை உணவும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
கொரோனா 3-ம் அலை
கொரோனா 3-ம் அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் அதிக அளவில் உள்ளதால் கொரோனா காலகட்டத்தில் தாய் பாலின் மகிமையை உணர்ந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்ட வேண்டும்.
இதனை வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவிதேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார். இதில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வரையப்பட்டிருந்த விழுப்புணர்வு வண்ண கோலங்களையும் பார்வையிட்டார்.
விழிப்புணர்வு உறுதி மொழி
தொடர்ந்து கலெக்டர் தலைமையில் தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் திருவண்ணாமலை நகராட்சி, துரிஞ்சாபுரம், கலசபாக்கம், புதுப்பாளையம் மற்றும் செங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விழிப்புணர்வு வாகனம் செல்லும் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வரை சென்றனர்.
நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story