திருப்பூரில் வணிக பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன.


திருப்பூரில் வணிக பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன.
x
தினத்தந்தி 7 Aug 2021 4:04 PM GMT (Updated: 2021-08-07T21:34:15+05:30)

திருப்பூரில் வணிக பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன.

திருப்பூர், 
திருப்பூரில் வணிக பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன. 
 வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் வினீத் அறிவித்தார். கடந்த 5-ந் தேதி முதல் காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்டம் சேராமல் தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாநகர பகுதியில் 33 வணிக பகுதிகள், அதுபோல் பல்லடத்தில் ஒரு பகுதி, தாராபுரம், உடுமலை நகராட்சியில் தலா 6 வணிக பகுதிகளில் பால், மருந்துக்கடை, மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், உணவுப்பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் இயக்க தடை விதிக்கப்பட்டது.
அதன்படி நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட 33 வணிக பகுதிகள் உள்ள பகுதிகளில் மளிகை கடை, காய்கறி கடைகள், பால் மற்றும் மருந்துக்கடைகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி, நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. காதர் பேட்டையில் உள்ள பனியன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.
இதே போல் உடுமலை, மடத்துக்குளம், போடிபட்டி, தாராபுரம், மூலனூர், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 
கடைக்காரர்கள் குழப்பம்
33 வணிக பகுதிகளை கலெக்டர் அறிவிப்பு செய்திருந்தார். ஆனால் அந்த பகுதிகளை வரைமுறைப்படுத்தி கடைகளை அடைப்பதில் வியாபாரிகள், கடைக்காரர்கள் பெரிதும் குழம்பி போனார்கள். பிரதான ரோட்டில் ஒரு பகுதியில் கடை திறக்கவும், மற்றொருபுறம் கடை அடைக்கும் நிலை ஏற்பட்டது. போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று கடைகளை அடைக்க கூறினார்கள். ஆனால் அவர்களுக்குமே எந்த பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்க வைப்பது என்பது குறித்து தெளிவான முடிவு இல்லாமல் குழம்பி போய் இருந்தனர். நேற்று காலை முதல் இந்த குழப்ப நிலை நீடித்தது. கடைக்காரர்கள், வர்த்தக நிறுவனத்தினர் தங்கள் கடைகளை திறக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பமடைந்தனர்.
எந்தெந்த பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று கடைக்காரர்கள், வர்த்தக நிறுவனத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டாலும் தெளிவான நடைமுறையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story