கடனை திருப்பி கொடுக்காததால் முடிதிருத்தும் தொழிலாளி காரில் கடத்தல்


கடனை திருப்பி கொடுக்காததால் முடிதிருத்தும் தொழிலாளி காரில் கடத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2021 5:45 PM GMT (Updated: 2021-08-07T23:15:09+05:30)

செஞ்சி அருகே கடனை திருப்பி கொடுக்காததால் முடிதிருத்தும் தொழிலாளி காரில் கடத்தப்பட்டார்.

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள போந்தை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் கன்னியப்பன்(வயது 27). முடிதிருத்தும் தொழிலாளி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை கேளம்பாக்கத்தில் பன்னீர்செல்வம் என்பவரது சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். 
அப்போது கன்னியப்பன், பன்னீர்செல்வத்திடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கன்னியப்பன் வேலையில் இருந்து நின்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்னியப்பனிடம் செல்போனில் பேசிய பன்னீர்செல்வம், ரூ.75 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். 

காரில் கடத்தல் 

இந்த நிலையில் போந்தை கிராமத்திற்கு காரில் வந்த பன்னீர்செல்வம் உள்பட 4 பேர், கன்னியப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கன்னியப்பனை காரில் கடத்தி சென்றனர். அப்போது கன்னியப்பனின் மனைவி காமாட்சியிடம், பணத்தை திருப்பி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக பன்னீர்செல்வம் மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story