பூட்டிய வீடுகளில் திருடும் கும்பலை சேர்ந்த இருவர் கைது


பூட்டிய வீடுகளில் திருடும் கும்பலை சேர்ந்த இருவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 11:26 PM IST (Updated: 7 Aug 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல் ஒன்று இரவு நேரங்களில் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. 
குற்றவாளிகளை பிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டுகள் சந்திரபாபு, பழனி, மோசஸ், பிரவீன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை குடியாத்தத்தை அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நபர்கள் கையில் இரும்பு கம்பியுடன் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் புது தெருவைச் சேர்ந்த பிரபுசங்கர் என்கிற முகமது பிலால் (வயது 32), மேல்பட்டயைி அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் (27) என்பது தெரியவந்தது. இவர்கள் புவனேஸ்வரி பேட்டை மற்றும் ராமாலை பகுதியில் பகலில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு இரவில் அந்த வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து ஒரு பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story