வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க இளைஞர்கள் ஆர்வம்

ஊட்டியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க இளைஞர்கள் ஆர்வம்
Published on

ஊட்டி

ஊட்டியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

உதவி மையம்

தமிழகத்தில் கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 28-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிவாய்ப்பு பெறும் வகையில் பதிவு மேற்கொள்கிறவர்கள், படித்ததற்கான ஆவணங்களை காண்பித்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 3 ஆண்டுகள் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போட்டித்தேர்வு பயிற்சி

நீலகிரியில் பல்வேறு பகுதியில் உள்ள இளைஞர்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பதிவை புதுப்பித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி வடிவேல் கூறியதாவது:- கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படாமல் உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர்கள் ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த சிறப்பு பயிற்சியில் 50 பேர் பயனடைகின்றனர்.

உதவித்தொகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாத பதிவுதாரர்கள் 260 பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் 225 பேர் உதவித்தொகை பெற்று பயனடைந்தனர்.

தற்போது அரசு அறிவித்தப்படி ஆன்லைன் மற்றும் நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரியில் ஆன்லைன் மற்றும் நேரில் வந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொண்டனர்.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளம் மூலம் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com