பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கூடலூர், முதுமலையில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூர், முதுமலையில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பாண்டியாறு உள்பட அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் புத்தூர்வயல், தொரப்பள்ளி மற்றும் பந்தலூர் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கூடலூர் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து பரவலாக சாரல் மழையும், லேசான வெயிலும் என காலநிலை மாற்றம் காணப்பட்டது. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. பின்னர் முகாம்களில் தங்கியிருந்த ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
இதையடுத்து நீலகிரி உள்பட சில மாவட்டங்களில் தொடர் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கூடலூர், நடுவட்டம், முதுமலை மற்றும் பந்தலூர் பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் தொடர் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து சாரல் மழை பெய்த நிலையில் திடீரென மாலை 3 மணியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு, மாயாறு, பொன்னானி, சோலாடி, ஓவேலி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழை தாமதமாக பெய்தாலும் நெல் பயிருக்கு ஏற்றதாக உள்ளது. தொடர் கனமழையாக இல்லாமல் பரவலாக பெய்வதால் பெரிய அளவில் சேதங்களும் ஏற்படுவதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்றனர்
கடும் பனிமூட்டம்
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, சாரல் மழை பெய்தது. குன்னூரில் பலத்த மழை பெய்தது. குடியிருப்புகள், சாலைகளை கடும் பனிமூட்டம் சூழ்ந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.
2 மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை பெய்ததால் வெலிங்டன், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மஞ்சூரில் அரை மணி நேரம் மழை பெய்தது.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-3, நடுவட்டம்-22, கிளன்மார்கன்-17, அவலாஞ்சி-29, எமரால்டு-8, அப்பர்பவானி-34, தேவாலா-25, பந்தலூர்-23.3, சேரங்கோடு-38 என மழை பதிவாகியது.
Related Tags :
Next Story