பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் 16-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் 16-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 8:44 PM GMT (Updated: 2021-08-08T02:14:06+05:30)

பெரம்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் 3-வது அலை வராமல் தடுக்க தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பெரம்பலூர் நகராட்சியில் குறிப்பிட்ட பகுதிகள், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த 4-ந்தேதி காலை 6 மணி முதல் வருகிற 10-ந்தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 10-ந்தேதியுடன் முடிவடைய இருந்த இந்த ஊரடங்கை வருகிற 16-ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பினால் வழக்கம்போல் பெரம்பலூர் நகராட்சியில் சிவன் கோவில் முதல் மேற்கு வானொலி திடல் சந்திப்பு வரை, வானொலி திடல் முதல் பழைய பஸ் நிலையம் வரை, பழைய பஸ் நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி என்.எஸ்.பி. ரோடு, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், அரும்பாவூர் பேரூராட்சியில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை உள்ள பகுதிகள், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில், மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள பகுதிகளில் மருந்து கடைகள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் மட்டும் உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
50 சதவீத வாடிக்கையாளர்களுடன்...
இதனை தவிர்த்து பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story