கூடங்குளம் அருகே லோடு ஆட்டோ-கார் மோதல்; அண்ணன், தம்பி பலி
கூடங்குளம் அருகே லோடு ஆட்டோ-கார் மோதிக் கொண்ட விபத்தில் அண்ணன், தம்பி பரிதாபமாக பலியானார்கள்.
கூடங்குளம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப், மீனவர். இவருடைய மனைவி லில்லி (வயது 38). இவர்களுடைய மகன்கள் லிஜோ (14), ரிஜோ (12), ஜிதின் (11). இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் முறையே 9, 7, 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. எனவே, லில்லி தன்னுடைய 3 மகன்களுடன் குடும்ப நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த சுதீன், நவாஸ்கான் ஆகியோருடன் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆற்றங்கரைபள்ளிவாசலுக்கு காரில் சென்றார்.
நேற்று காலையில் அவர்கள் ஆற்றங்கரைபள்ளிவாசலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காரில் புறப்பட்டனர். சுதீன் காரை ஓட்டிச் சென்றார். கூடங்குளத்தை கடந்து தவசிபாறை வளைவு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக காய்கறி ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லோடு ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியதில் சிறுவர்கள் லிஜோ, ஜிதின் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். மேலும் காரில் இருந்த லில்லி, ரிஜோ, சுதீன், நவாஸ்கான் ஆகிய 4 பேரும் லேசான காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் லிஜோ, ஜிதின் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரான கூடங்குளத்தைச் சேர்ந்த சிவபெருமாளை (38) கைது செய்தனர்.
கூடங்குளம் அருகே விபத்தில் அண்ணன்-தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story