ஏற்காட்டுக்கு செல்ல தடை: மலையடிவாரத்தில் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தம்
ஏற்காட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளை மலையடிவாரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சேலம்
ஏற்காட்டுக்கு செல்ல தடை
தமிழகத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகின்றனர்.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். மற்ற நாட்களில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான் சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்து இல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழை காண்பித்துவிட்டு ஏற்காடு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்வதை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் மலையடிவாரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்காட்டுக்கு செல்வதற்காக காலை முதல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
ஆனால் மலையடிவாரத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வாரத்தில் 2 நாட்கள் ஏற்காட்டுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் அவர்களை அங்கிருந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றதுடன் திரும்பினர். தடையை மீறி செல்ல முயன்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story