எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு


எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 3:09 AM IST (Updated: 8 Aug 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள எடியூரப்பாவுக்கு, மந்திரிக்கான சலுகைகள் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு: முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள எடியூரப்பாவுக்கு, மந்திரிக்கான சலுகைகள் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மந்திரிக்கான சலுகைகள்

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா. அவர், கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது நெருங்கிய ஆதரவாளராக பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

 இந்த நிலையில், முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு மந்திரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, மந்திரிகளுக்கு நிகரான சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். இந்த சலுகைகள் முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை இருக்கும் வரையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி இல்லத்தில் தங்குகிறார்

இதன்மூலம் எடியூரப்பாவுக்கு, மந்திரியை போல அரசு சார்பில் கார், அதற்காக டிரைவர், அரசு பங்களா உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும். எடியூரப்பா தற்போது குமரகிருபா ரோட்டில் உள்ள காவேரி இல்லத்தில் வசித்து வருகிறார். முதல்-மந்திரி பதவி ராஜினாமா செய்திருப்பதால், 6 மாதத்தில் அரசு இல்லம், காரை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அந்த வீட்டை காலி செய்ய அவர் விரும்பவில்லை. தற்போது அவருக்கு மந்திரிக்கு நிகரான சலுகைகளை அரசு அறிவித்திருப்பதால், காவேரி இல்லத்திலேயே எடியூரப்பா தொடர்ந்து தங்கி கொள்ள முடியும். எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர் பசவராஜ் பொம்மை என்பதாலும், எடியூரப்பாவின் உத்தரவின் பேரிலேயே அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைத்திருப்பதாலும், எடியூரப்பாவுக்கு இந்த சலுகைகளை பசவராஜ் பொம்மை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story