கோலார் தங்கவயலில் முழுஅடைப்பு போராட்டம்
கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்வதை எதிர்த்து நேற்று கோலார் தங்கவயலில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள் மூடப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடின.
கோலார்: கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்வதை எதிர்த்து நேற்று கோலார் தங்கவயலில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள் மூடப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடின.
முழுஅடைப்பு போராட்டம்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், கோலார் தங்கவயல் முழுவதும் 7-ந் தேதி(நேற்று) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை முதலே கோலார் தங்கவயலில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. முழுஅடைப்பு காரணமாக கோலார் தங்கவயலில் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பஸ்கள் ஓடவில்லை. கடைகள், திரையரங்குகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் மூடிக்கிடந்தன.
அரசு பஸ்கள் ஓடின. ஆனால், பயணிகள் குறைந்த அளவிலேயே இருந்தனர். மாரிக்குப்பத்தில் இருந்து பெங்களூரு வரை காலையில் செல்லும் சுவர்ணா ரெயில் வழக்கமான பயணிகளுடன் இயங்கியது. பொதுமக்கள் வெளியில் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அசம்பாவிதங்கள் இல்லை
அவசர தேவைக்காக மருத்துவமனைகள், மருந்தகங்கள் திறந்திருந்தன. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை ஆகிய முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆயுதப்படை போலீசார் வேன்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நடைபெற்ற இந்த முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் அம்பாவிதங்கள் இன்றி நடந்தது.
Related Tags :
Next Story