திருவொற்றியூரில் ரூ.35 கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை; எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு
திருவொற்றியூர் கிராமத்தெரு ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது. அதன்பிறகு கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்படுத்தும் வகையில் சுமார் ரூ.35 கோடியில் திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
ரெயில்வே சுரங்கப்பாதை மற்றும் பொருட்களை சேமிக்கும் கிடங்கு ஆகியவற்றை அமைக்க இந்த பகுதியில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான சுமார் 1½ ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை கையகப்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்படையும் சூழ்நிலை உருவானது. இந்தநிலையில் நேற்று கையகப்படுத்த வேண்டிய இடங்களை ஆய்வு செய்ய ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கிராமத்தெரு ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. ஆகியோரும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ரெயில்வே துறை அதிகாரிகளிடம் எம்.பி., எம்.எல்.ஏ. இருவரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுரங்கப்பாதை அமைக்க தேவையான நிலங்களை மட்டும் தற்போது கையகப்படுத்தி பணிகளை விரைவாக தொடங்குவது என்றும், மக்கள் வசிக்கும் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அதிகாரிகள் தீர்மானித்தனர்.
Related Tags :
Next Story