சுடுமண் முத்திரை கண்டெடுப்பு


சுடுமண் முத்திரை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 7:27 PM GMT (Updated: 19 Aug 2021 7:27 PM GMT)

திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுடுமண் முத்திரை, கூடுதல் அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது

திருப்புவனம்
திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுடுமண் முத்திரை, கூடுதல் அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.
சுடுமண் முத்திரை
திருப்புவனம் யூனியனை சேர்ந்த அகரத்தில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு குழியில் சுடுமண்ணால் ஆன முத்திரை 256 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளது. இந்த முத்திரையானது கனமாகவும், தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல் பகுதியானது உட்குழிவுள்ள உருளை வடிவத்தினையும் கொண்டுள்ளது. முத்திரையின் தலைப்பகுதியில் கீறப்பட்ட மூன்று பிரிவுகளை கொண்ட தடிமனான வட்ட வடிவ அலங்காரங்கள் உள்ளன. அவ்வட்ட வடிவத்தின் நடுவே புள்ளிகள் காணப்படுகின்றன. 
கைபிடி பகுதியின் பக்கவாட்டிலும் முத்திரையின் தலைப்பகுதியிலும் சிறிது சேதமடைந்துள்ளது. இந்த முத்திரையின் மேற்புறம் நன்கு வழுவழுப்பாகவும், அடிப்பகுதி சற்று சொரசொரப்பாகவும் உள்ளது. மிக நேர்த்தியாக கையால் வனையப்பட்டுள்ள இம்முத்திரையானது 2.75 செ.மீ உயரமும், முத்திரையின் தலைப்பகுதியின் விட்டம் 2.80 ஆகவும் உள்ளது. இந்த முத்திரையின் எடை 24.6 கிராம் ஆகும்.
உறை கிணறு
மேலும் அகரத்தில் நத்தை ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பெரிய பானைகள், செங்கல் சுவர், சுடுமண் பொம்மை, சுடுமண் உறைகிணறு உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரத்தில் ஒரு குழியில் ஏற்கனவே 7 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 
அதே குழியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டதில் கூடுதலாக மூன்று அடுக்கு உறைகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் பத்து அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கும்போது கூடுதலாக அடுக்கு உறைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக என கருதப்படுகிறது.

Next Story