பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 11 மையங்களில் வாக்கு எண்ணிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 11 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
திண்டுக்கல்:
486 கவுன்சிலர் பதவிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 2 பேர், 5 பேரூராட்சிகளில் 6 பேர் என மொத்தம் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மீதமுள்ள 478 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கு மொத்தம் 2 ஆயிரத்து 61 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 926 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 52 பேர் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 70.65 ஆகும்.
11 மையங்கள்
இதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் மாவட்டம் முழுவதும் 11 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதையடுத்து 11 மையங்களிலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதேபோல் பழனி நகராட்சி, ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு பிள்ளையார்நத்தம் அம்மன் கலை கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மேலும் அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு வேடசந்தூர் பி.வி.எம். மெட்ரிக் பள்ளியிலும், பாளையம், எரியோடு ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு குஜிலியம்பாறை சி.சி.சி.குவாரி ராணிமெய்யம்மை பள்ளியிலும், வடமதுரை, அய்யலூர் ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நத்தம் பேரூராட்சிக்கு நத்தம் துரைக்கமலம் பள்ளியிலும் வாக்கு எண்ணும் பணி நடந்தது.
இதுதவிர நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரியிலும், அய்யம்பாளையம், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சிக்கு கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பலத்த பாதுகாப்பு
இதையொட்டி 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் காலை 6 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்தனர்.
அதையடுத்து வாக்கு எண்ணும் அலுவலர்கள் மையங்களுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து 7 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மையங்களுக்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை. இதனால் வேட்பாளர்கள், முகவர்கள் 3 கட்ட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிலரின் செல்போன்களை போலீசார் வாங்கி வைத்து கொண்டனர். பின்னர் வெளியே செல்லும் போது திரும்ப கொடுத்தனர்.
வாக்கு எண்ணிக்கை
இதற்கிடையே காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டன. பின்னர் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கு உரிய வாக்கு எண்ணும் மேஜைக்கு வழங்கப்பட்டு எண்ணப்பட்டன.
அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டது.
இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள் வாக்கு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு வார்டுக்கு உரிய வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டுக்கு உரிய வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே அடுத்த வார்டுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
அப்போது ஒவ்வொரு சுற்றின் முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் எண்ணப்பட்டு இறுதியில் வெற்றிபெற்றவர் அறிவிக்கப்பட்டார். அதோடு வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி
இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒரே நேரத்தில் 14 வார்டுகளுக்கு உரிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவாக அறிவிக்கப்பட்டன. முதல் 14 வார்டுகளின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே அடுத்த 14 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
Related Tags :
Next Story