ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரிகல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரிகல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2022 12:24 AM IST (Updated: 23 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி காரைக்காலில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால், பிப்.23-
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி காரைக்காலில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆன்லைனில் தேர்வு
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும்   என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் கல்லூரி தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி காரைக்காலை சேர்ந்த அரசு, தனியார் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காரைக்கால் அரசலாறு மதகடி பாலம்  அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை
புதுவையில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டத்தை நடத்தினார்கள்.
புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியிலும் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

Next Story