36 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது


36 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 12:27 AM IST (Updated: 23 Feb 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

36 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தபுரம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

செஞ்சி, 

அனந்தபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 5 ஆயிரத்து 516 பேர். இந்த பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 50 பேர் போட்டியிட்டனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்து 560 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது 82.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 

தி.மு.க. கைப்பற்றியது 

இதையடுத்து வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் அனைத்தும், செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நேற்று காலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. 
இதில் 9 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் மூலம் அனந்தபுரம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. 5 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளனர்.

36 ஆண்டுகளுக்கு பிறகு...

அனந்தபுரம் பேரூராட்சியை பொறுத்தவரை சுயேச்சை வேட்பாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அதாவது கடந்த 1969-ம் ஆண்டு அனந்தபுரம் பேரூராட்சியாக தரம் உயர்ந்தது. அதன்பிறகு 6 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில் 4 முறை சுயேச்சை வேட்பாளரே தலைவராக இருந்தார். ஒரு முறை தி.மு.க.வும், ஒரு முறை பா.ம.க.வும் பேரூராட்சியை கைப்பற்றி இருந்தது. 
அதாவது, 1970-சுயேச்சை, 1986 -தி.மு.க, 1996-சுயேச்சை, 2001- சுயேச்சை, 2006- பா.ம.க., 2011- சுயேச்சை வேட்பாளர் தலைவராக இருந்தனர். அதாவது 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தி.மு.க. அனந்தபுரம் பேரூராட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story