கரூர் மாநகராட்சியை தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது


கரூர் மாநகராட்சியை தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 12:46 AM IST (Updated: 23 Feb 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாநகராட்சியில் 44 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 2 வார்டிலும், சுயேச்சை 2 வார்டிலும் வெற்றி பெற்றனர்.

கரூர், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகள், புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், மருதூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், அரவக்குறிச்சி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 246 வார்டுகளுக்கு 1,330 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 363 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 5 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் 241 வார்டுகளுக்கு மொத்தம் 938 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதனையடுத்து கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீதமும், 3 நகராட்சிகளில் 68.15 சதவீதமும், 8 பேரூராட்சிகளில் 86.43 சதவீதமும் என மாவட்டத்தில் 76.34 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹசானா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதனையொட்டி கரூர் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான தாந்தோணி அரசு கலைக்கல்லூரி செல்லும் வழியில் பேரிகார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசு கலைக்கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று காலை 6.30 மணி முதலே வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அரசு கலைக் கல்லூரி முன்பு குவிந்திருந்தனர். 
இந்நிலையில் மூன்று வார்டுகளுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கும் எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே வந்த பின்னர் அடுத்தடுத்த 3 வார்டுகளுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்திருந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வாக்குகள் எண்ணப்பட்டன
நேற்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. பின்னர் பாதுகாப்பு அறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 12 மேஜைகளில் 16 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி காலை 9 மணியளவில் தொடங்கியது. முதலில் முதல் 3 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த வார்டுகளுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
 9-வது வார்டில் காங்கிரசும், 10-வது வார்டில் தி.மு.க.வும், 11-வது வார்டில் அ.தி.மு.க.வும், 12-வது வார்டில் சுயேச்சையும், 13-வது வார்டில் தி.மு.க.வும், 14-வது வார்டில் அ.தி.மு.க.வும், 15-வது வார்டில் தி.மு.க.வும், 16-வது வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். மேலும் 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 ஆகிய வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. 41-வது வார்டில் தி.மு.க. கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. 42, 43, 44, 45, 46, 47, 48 ஆகிய வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
44 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி
கரூர் மாநகராட்சி 48 வார்டுகளில் தி.மு.க. 42 வார்டுகளிலும் அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இதில் தி.மு.க. கூட்டணி 44 வார்டுகளை கைப்பற்றியது. 22-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகினார். தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. 
இதில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார். வெற்றிபெற்ற வேட்பாளர்களை, அக்கட்சியை சேர்ந்தவர்கள் தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வாக்கு எண்ணும் மையமான அரசு கலைக்கல்லூரிக்கு வெளியே பட்டாசுகள் வைத்தும், மேளதாளங்கள் முழங்கவும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story