ஒரு ஓட்டு கூட வாங்காத பா.ம.க.


ஒரு ஓட்டு கூட வாங்காத பா.ம.க.
x
தினத்தந்தி 23 Feb 2022 2:44 AM IST (Updated: 23 Feb 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. மாநகராட்சியிலேயே அதிக வாக்குகளை கைப்பற்றிய வேட்பாளராக தி.மு.க. வேட்பாளர் உள்ளார்.

கும்பகோணம்:-

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. மாநகராட்சியிலேயே அதிக வாக்குகளை கைப்பற்றிய வேட்பாளராக தி.மு.க. வேட்பாளர் உள்ளார். 

முதல் தேர்தல்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகராட்சியாக இருந்தது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 19-ந் தேதி முதன் முறையாக கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 38 வார்டுகளை கைப்பற்றி தி.மு.க. வெற்றி வாகை சூடி உள்ளது. இதனால் ‘முதல் மேயர்’ பதவி தி.மு.க.வுக்கு கிட்டி உள்ளது. 
கும்பகோணம் மாநகராட்சியில் தனித்து தேர்தல் களம் கண்ட அ.தி.மு.க. 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். 

ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை

கும்பகோணம் மாநகராட்சியில் 35-வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இதேபோல் 30-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் முருகன் மாநகராட்சியிலேயே அதிக வாக்குகளை கைப்பற்றி உள்ளார். அவருக்கு மொத்தம் 1,480 வாக்குகள் கிடைத்துள்ளது. 
கும்பகோணம் அரசினர் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கையும், சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. இதை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு கும்பகோணம் மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்முருகன் சான்றிதழை வழங்கினார்.

Next Story