கர்நாடக பட்ஜெட் வருகிற 4-ந் தேதி தாக்கல்


கர்நாடக பட்ஜெட் வருகிற 4-ந் தேதி தாக்கல்
x
தினத்தந்தி 23 Feb 2022 2:44 AM IST (Updated: 23 Feb 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

2022-23-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட் வருகிற 4-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திசை திருப்ப முயற்சி

  காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் தர்ணா நடத்தி சபையின் நேரத்தை வீணடித்துவிட்டனர். அவர்கள் எல்லாவற்றையும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். எந்த விவாதங்களும் இன்றி சட்டசபை கூட்டத்தொடர் முடங்கியது வேதனை அளிக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் அதுபற்றி சபையில் விவாதித்து இருக்க வேண்டும். பெலகாவியில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

  அதற்கு இன்னும் மேல்-சபையின் ஒப்புதல் கிடைக்கவில்லை. மேல்-சபையில் அதை தாக்கல் செய்து அதன் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும். மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதனை ஆலோசித்து தான் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். காவி கொடி தொடர்பாக மந்திரி ஈசுவரப்பாவின் கருத்தை திரித்து மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

பட்ஜெட் தாக்கல்

  நாங்கள் எல்லா விவாதத்திற்கும் தயாராக இருந்தோம். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவருடன் பேசி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. 2022-23-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்திற்கு தான் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story