தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் தேங்கும் சாக்கடை நீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி ஊராட்சி அட்கோ போலீஸ் நிலையம் அருகில் பாஸ்கர் தாஸ் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள சர்வீஸ் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எப்போதும் கழிவுநீர் வெளியேறுவதால் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தினமும் மார்க்கெட்டுக்கு வரும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் இந்த சர்வீஸ் சாலையில் செல்வதால் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணமூர்த்தி, பத்தலப்பள்ளி, ஓசூர்.
அரசு ஆஸ்பத்திரி நோயாளிகள் அவதி
தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் வெந்நீர் இல்லாமல் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வெந்நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், அரூர், தருமபுரி.
எரியாத மின்விளக்கு
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு பிள்ளுமடை காட்டில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து 3 மாதங்கள் ஆகிறது. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த பகுதியை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி மின்விளக்கை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திவாகர், பிள்ளுமடைகாடு, நாமக்கல்.
சாலை அமைக்கப்படுமா?
சேலம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, சீனிவாச நகரில் கரடு முரடான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக சாலை போடாததால் மழைக்காலங்களில் கழிவு நீருடன், மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியில் மக்கள் நோயால் அவதிப்படுகின்றனர். இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், சின்னதிருப்பதி, சேலம்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கோட்டமேட்டுப்பட்டி 1-வது வார்டு, பாலாஜி நகர், பல்பாக்கி பிரிவு பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
-சண்முகம், கோட்டமேட்டுப்பட்டி, சேலம்.
Related Tags :
Next Story