சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 23 Feb 2022 11:31 PM IST (Updated: 23 Feb 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு டி.ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் தங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காலிமனைகளை போலியான ஆவணங்களை வைத்து வேறு நபர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் கூறினர். மேலும் எவ்விதமான ஆவணங்களையும் சரிபார்க்காமல் பத்திரம் பதிவு செய்ததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சார்பதிவாளர் மாயஅழகு மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் அவர்கள் வைத்திருந்த சொத்து ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அவர்களுக்கு சொந்தமான இடங்களை போலியான ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு பாகப்பிரிவினையாக பகிர்ந்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவித்து, போலியான பத்திரபதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தை அவர்கள் கைவிட்டு, மாவட்ட வருவாய் அலுவலரை சந்திக்க புறப்பட்டு சென்றனர். இந்த போராட்டத்தால் ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது.


Next Story