ஒடுகத்தூர் அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஒடுகத்தூர் அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய கணவன் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறு
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் தாமரைக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் திலீப்குமார் (வயது 25). இவருக்கும் பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் காயத்ரி (20) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு மாதத்திலேயே கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் காயத்திரி 5 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மகளை பார்ப்பதற்காக தாமரைக்குட்டை கிராமத்திற்கு வந்துள்ளார். சிறிது நேரம் மகளிடம் பேசிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து காயத்ரிக்கும், திலீப்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, காயத்திரியை திலீப்குமார் அடித்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதில் ஆத்திரமடைந்த காயத்ரி வீட்டின் அறை கதவை பூட்டிக்கொண்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டு பெண் காயத்திரியை பலமுறை அழைத்துள்ளார். கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சென்று காயத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காயத்திரியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமார், அவரது சகோதரிகள் செல்வி (50), திவ்யா (30) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story