கடலில் மூழ்கிய குமரி மீனவரின் கதி என்ன?


கடலில் மூழ்கிய குமரி மீனவரின் கதி என்ன?
x
தினத்தந்தி 24 Feb 2022 1:32 AM IST (Updated: 24 Feb 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மாயமான குமரி விசைப்படகு மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் குடும்பத்தினர் சோகத்துடன் உள்ளனர்.

கொல்லங்கோடு:
மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மாயமான குமரி விசைப்படகு மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் குடும்பத்தினர் சோகத்துடன் உள்ளனர்.
குமரி மீனவர்
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 17-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 7 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். 
நேற்று முன்தினம் அவர்கள் சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை கடலோர எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 
கடலில் தவறி விழுந்தார்
அப்போது படகில் இருந்த நடைக்காவு பகுதியை சேர்ந்த ஜெபமணி என்பவர் திடீரென கடலில் தவறி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே கடலில் குதித்து ஜெபமணியை நீண்ட நேரம் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சக மீனவர்கள் தேடும் பணியை நிறுத்தி விட்டு கரைக்கு திரும்பினர்.
பின்னர் இதுபற்றி மீன்வர்கள் குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் குமரி மாவட்ட மீனவ சங்கங்களுக்கு தெரிவித்து விட்டு மீண்டும் ஜெபமணியை தேடிச் சென்றனர்.
கதி என்ன?
கடந்த 2 நாட்களாக ஜெபமணியை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து 6 மீனவர்களும் நேற்று மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பினர்.
கடலில் மூழ்கிய மீனவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லாததால் அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். 
இதற்கிடையே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஜெபமணியை மீட்டுத்தரக்கோரி கடலோர காவல் படைக்கு மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Next Story