பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் விசாரணை அறிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை; பசவராஜ் பொம்மை
பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் விசாரணை அறிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அடுத்தக்கட்ட நடவடிக்கை
சிவமொக்காவில் நடந்த பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் திறமையாக செயல்பட்டு கைது செய்துள்ளனர். கைதான நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை அறிக்கை கிடைத்த பின்பு, ஹர்ஷா கொலை வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கொலை வழக்கின் விசாரணையை வேறு அமைப்புகள் விசாரிக்க உத்தரவிடுவது குறித்தும் முடிவு செய்யப்படும். சிவமொக்காவில் அமைதி திரும்பி இருக்கிறது. இந்த சம்பவத்தால் சிவமொக்கா மக்கள் இடையே எந்த ஆதங்கமும் இல்லை.
காங்கிரசுக்கு அனுபவம் இருந்ததால்...
சிவமொக்காவில் 144 உத்தரவும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சிவமொக்கா வன்முறைக்கு அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற வன்முறையை தூண்டிவிட்ட அனுபவம் இருந்ததால், அதனையே தற்போதும் கூறி இருக்கிறாா்கள்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு, காங்கிரஸ் கட்சியினர் பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஹர்ஷா கொலை குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலானாய்வு முகமை) விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி, போலீசாரின் விசாரணைக்கு பின்பே முடிவு செய்யப்படும்.
அமைதி திரும்ப முன்னுரிமை
பள்ளி, கல்லூரிகள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும். ஹர்ஷா கொலை காரணமாக சிவமொக்காவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் விரைவில் இறுதி தேர்வு தொடங்க இருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது.
அதனால் தான் சிவமொக்காவில் அமைதி நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது.
வருகிற 25-ந் தேதி டெல்லிக்கு செல்ல இருக்கிறீர்களா? என்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். தற்சமயம் டெல்லி செல்வதற்கோ, மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கோ முடிவு செய்யவில்லை. அதுபோன்ற சூழ்நிலையும் வரவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story