தலா 4 வார்டுகளில் வெற்றி: குற்றாலம் பேரூராட்சியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. கடும் போட்டி
தலா 4 வார்டுகளில் வெற்றி பெற்றதால் குற்றாலம் பேரூராட்சியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது
தென்காசி:
தலா 4 வார்டுகளில் வெற்றி பெற்றதால் குற்றாலம் பேரூராட்சியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
குற்றாலம் பேரூராட்சி
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, அ.ம.மு.க., சுயேச்சைகள் என மொத்தம் 18 பேர் போட்டியிட்டனர்.
இந்த பேரூராட்சியில் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 2,396 வாக்குகள் பதிவானது. குற்றாலம் சுற்றுலா தலமாக இருப்பதால் இந்த பேரூராட்சியை பிடிப்பதில் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவியது.
தலா 4 வார்டுகளில் வெற்றி
இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தலா 4 வார்டுகளில் வெற்றி பெற்று சமனில் உள்ளன. இருகட்சிகளும் சமபலத்தில் உள்ளதால் பேரூராட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், அ.தி.மு.க.வில் உள்ள ஒருவர் தி.மு.க.வுக்கோ அல்லது தி.மு.க.வில் உள்ள ஒருவர் அ.தி.மு.க.வுக்கோ ஆதரவு அளித்தால் மட்டுேம 2 கட்சிகளில் ஒன்று குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றும். இதனால் அங்கு குதிரைபேரம் அதிக அளவில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பரபரப்பு
ஆனாலும், இதுபோன்று குதிரை பேரம் நடக்காமல் இருப்பதற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என்று பல்வேறு தரப்பினர் கூறுகிறார்கள். எனினும் ஓரிரு நாட்களில் குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றுவது யார் என்பது தெரிந்துவிடும்.
இதனால் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story