நெல்லை மாவட்டத்தில், வருகிற 27-ந்தேதி 918 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் 1¼ லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்


நெல்லை  மாவட்டத்தில்,  வருகிற  27-ந்தேதி 918 இடங்களில் போலியோ          சொட்டு மருந்து முகாம்  1¼ லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்
x
தினத்தந்தி 24 Feb 2022 1:59 AM IST (Updated: 24 Feb 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதில் 1¼ லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள், என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
சொட்டு மருந்து
நெல்லை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலியோ சொட்டு மருந்து இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் கடந்த 12 ஆண்டுகளாக போலியோ நோய் தாக்கம் இல்லாமல் உள்ளது. இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஒரே தவணையாக வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
918 முகாம்
இந்த முகாமில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 174 குழந்தைகள் பயனடைவார்கள். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும், செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் என மொத்தம் 918 முகாம்கள் அமைக்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு பிறகு 7 நாட்களும் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 442 செவிலியர்கள், 60 கல்லூரி மாணவர்கள், சத்துணவு பணியாளர்கள் 1,786 பேர், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1,480 பேர் ஆக மொத்தம் 3,768 பேர் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணலீலா, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், குடும்ப கட்டுப்பாடு துணை இயக்குனர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story