நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி: தி.மு.க.வின் கோட்டையாக மாறிய சேலம் மாவட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சேலம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம்
கொங்கு மண்டலத்தில் சேலம் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாக கருதப்படுகிறது. இந்த மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, மேட்டூர் என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அதன்பிறகு 2016 மற்றும் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் சேலம் (வடக்கு) தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வக்கீல் ராஜேந்திரன் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மற்ற 10 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. இதன்மூலம் சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழ்ந்தது.
தி.மு.க. ஆட்சி அமைத்தாலும் சேலம் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற ஏக்கம் சேலம் மக்களிடையே உள்ளது.
மு.க.ஸ்டாலின் தனி கவனம்
சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடிக்கவில்லை என்றாலும் சேலம் மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதுடன், அதனை செயல்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுத்தார். சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். இதனால் அவர் சேலம் மீது தனிக்கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும், கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பொறுப்பு அமைச்சராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை கடந்த 2 மாதத்திற்கு முன்பு நியமித்தார். முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்திற்கு அடிக்கடி வந்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேரு தேர்தல் வியூகம்
சேலத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்துவது, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய வியூகம் அமைப்பது போன்ற ஆலோசனைகளையும் வழங்கியதால் கட்சியினர் உற்சாகம் அடைந்து தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக செய்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாநகராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் இருந்து 30 ஆயிரம் மனுக்களை பெற்றார். அவற்றில் 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கி உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்தார். இதனால் சேலம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வசம் இருந்த நகராட்சிகள், பேரூராட்சிகளையும் தி.மு.க. தனது வசமாக்கியுள்ளது. மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 27 பேரூராட்சிகளையும் கைப்பற்றி சேலம் மாவட்டம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி உள்ளதாகவும், வரும் காலங்களில் இதை தக்க வைத்துக்கொள்வோம் என தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story