மா மரங்களில் பூச்சி தாக்குதல்; சாகுபடி பாதிக்கும் அபாயம்
மா மரங்களில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:-
மா மரங்களில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மா சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சுவை மிகுந்த ரகங்களான அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா, பீத்தர், செந்தூரா, நீலம் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
தரமான மாம்பழங்கள் உள்நாடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாமரங்கள் பொதுவாக டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பூ பூக்கும். இந்த ஆண்டு பெய்த மழை காரணமாக மாமரங்களில் பூக்கள் நிறைந்து காணப்பட்டதால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் மா விவசாயிகள் இருந்தனர்.
பூச்சி தாக்குதல்
ஆனால் இந்த ஆண்டு மா பூக்களில் பூச்சி தாக்குதல் காரணமாக, சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்தரராஜன், அணை கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு ஆகியோர் கூறியதாவது:-
மழையால் மாமரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்கியது. ஆனால் வழக்கம் போல் பூக்களில் தத்துபூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால், பூக்கள் கருகிவிட்டது. பூச்சி தாக்குதலை தடுக்க 4 முறை மருந்து தெளித்தும் பயன் இல்லை. இதனால் மா மகசூல் 80 சதவீதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிரந்தர தீர்வு
தொடர்ந்து இதே நீடித்தால் மா விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்திற்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியால் காய்ந்து போன மாமரங்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. பூக்கள், காய்களை தாக்கும் இவ்வகையான பூச்சிகள், தற்போது மா இலைகளை தாக்கி வருகிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் உள்ளது.
எனவே, தோட்டக்கலைத்துறை, பூச்சியல் துறை விஞ்ஞானிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை கிடைக்கும் வருவாய் மூலம் மட்டுமே மா விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. இழப்புகளை சந்திக்கும் மா விவசாயிகளை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story