பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

மைசூரு அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு:
காதல்
மைசூரு தாலுகா சிங்கமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ்(வயது 21). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா (18) என்பவரும் ஒரே கல்லூரியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர்.
பெற்றோர் எதிர்ப்பு
இதற்கிடையே காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆனால் அவர்கள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதல் ஜோடியை எச்சரித்தனர். இதனால் கடந்த ஆண்டு காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் ஏற்று கொள்வார்கள் என கடந்த 21-ந்தேதி சிங்கமாரனஹள்ளி கிராமத்திற்கு ராகேசும், அர்ச்சனாவும் வந்தனர்.
அப்போது அவர்களை, இருவீட்டு பெற்றோரும் ஏற்று கொள்ளவில்லை. வீட்டிற்குள் வரகூடாது என்று கூறி கதவை பூட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராகேசும், அர்ச்சனாவும் மனமுடைந்து காணப்பட்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ராகேசும், அர்ச்சனாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் அறிந்து பிளிகெரே போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்த காதல் ஜோடியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியான ராகேசும், அர்ச்சனாவும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-----------------
Related Tags :
Next Story