பெரிய தலைவராக உருவெடுப்பதற்காக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சரியல்ல - சபாநாயகர் காகேரி அறிவுரை


பெரிய தலைவராக உருவெடுப்பதற்காக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சரியல்ல - சபாநாயகர் காகேரி அறிவுரை
x
தினத்தந்தி 24 Feb 2022 3:02 AM IST (Updated: 24 Feb 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

பெரிய தலைவராக உருவெடுக்க சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சரியல்ல என்று சபாநாயகர் காகேரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  பெங்களூருவில் நேற்று சபாநாயகர் காகேரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சர்ச்சைக்குரிய வகையில் பேசி...

  சட்டசபைக்குள் உள்ளேயும், வெளியேயும் உறுப்பினர்கள் பேசும் போது, சமுதாயத்தில் அன்பு, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது பெரிய தலைவராக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை கூறி பேசி வருகின்றனர். இது சரியல்ல. மக்கள் பிரதிநிதிகள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களை நல்ல வகையில் சென்றடைய வேண்டும். சில நேரம் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் கருத்துகளை, தொலைக்காட்சி சேனல்களும் பெரிதுபடுத்தி விடுகின்றனர்.

  சமுதாயத்தில் பொறுப்பு மிகுந்த பதவிகளில் இருக்கும் ஒருவர், தங்களது பொறுப்புகளை உணர்ந்து தாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து பேச வேண்டும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட நபரையோ, ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து கொண்டோ இதுபோன்ற கருத்துகளை கூறவில்லை. சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் பேச்சுக்களை மறந்து விடுவார்கள். ஆனால் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

விவாதங்கள் நடைபெறவில்லை

  கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 7 நாட்களிலேயே முடித்து கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் 2 நாட்கள் மட்டுமே சரியாக சபை நடந்துள்ளது. மீதி 5 நாட்கள் தர்ணா, கூச்சல், குழப்பத்தால் சரியாக நடைபெறவில்லை. கடந்த ஆண்டு(2021) கூட சட்டசபை வெறும் 40 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், சட்டசபையில் விவாதம் நடத்தி தீர்வு காணவேண்டும்.

  ஆளும்கட்சியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் விவாதங்களுக்கு தயாராக இருந்தும், காங்கிரஸ் தர்ணாவால் எந்த விவாதங்களும் நடைபெறவில்லை. வருகிற 4-ந் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தேர்தல் சீர்த்திருத்தங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story