சிவமொக்கா பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் - போலீசாருக்கு, கர்நாடக அரசு உத்தரவு


சிவமொக்கா பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் - போலீசாருக்கு, கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 24 Feb 2022 3:05 AM IST (Updated: 24 Feb 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய போலீசாருக்கு கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

8 பேர் கைது

  கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் சீகேஹட்டி பகுதியில் வசித்து வந்த ஹர்ஷா (வயது 24) படுகொலை செய்யப்பட்டார். பஜ்ரங்தள பிரமுகரான இவரை கடந்த 20-ந்தேதி இரவு மர்மநபர்கள் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக காசிப் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

  ஹர்ஷாவின் கொலையை தொடர்ந்து சிவமொக்காவில் வன்முறை சம்பவம் உள்பட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டது. இதையடுத்து 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. நாளை(25-ந் தேதி) வரை இந்த 2 தடை உத்தரவுகளும் அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

போலீஸ் குவிப்பு

  மேலும் சிவமொக்காவில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அங்கு அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, ஆயுதப்படை உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

  இந்த நிலையில் இக்கொலை சம்பவம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

8 பேர் கைது

  சிவமொக்காவில் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிவமொக்காவில் அமைதி திரும்பி உள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹர்ஷா கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களுக்கு பிற வழக்குகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

  கைதானவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு ஏதேனும் மிரட்டல் வந்திருந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளிக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். கோட்டை மற்றும் தொட்டபேட்டை போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்பு

  ஹர்ஷா கொலையில் கைதானவர்கள், ஒன்று அல்லது 2 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. போலீஸ் விசாரணையின் போது, ஹர்ஷா கொலைக்கு பின்னால் பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

  அதுதொடர்பாக கைதான நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்கள், எந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தார்கள், கைதானவர்களுக்கு பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா?. உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

ஒரு வாரத்தில் அறிக்கை

  கொலைக்கு பின்னணியில் உள்ள அமைப்புகள், கைதானவர்கள் யார்? யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தும்படி, மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளேன். ஹர்ஷா கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

  விசாரணையில், போலீசார் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வலுத்து வருவதால், அதுபற்றி கூடிய விரைவில் அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story