பேரம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு


பேரம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 7:45 PM IST (Updated: 24 Feb 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு கடைகள்

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஜார் பகுதியில் முக்கிய சாலைகளில் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகளை கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், மேற்பார்வையில், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் பொதுப்பணித் துறையினர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பேரம்பாக்கம் பஜார் பகுதிக்கு வந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டல்கள், பேக்கரிகள், நகைக்கடை, துணிக்கடை, இனிப்பகம், பழக்கடை, பூமாலைகடை, காய்கறி கடைகள், ஜெராக்ஸ் கடை, செல்போன் ரீசார்ஜ் கடை, மருந்தகம் என 39 கடைகளுக்கு நேற்று காலை 8 மணி அளவில் சென்று உடனடியாக கடைகளை அகற்ற 2 மணி நேரம் கால அவகாசம் கொடுத்தனர்.

அதற்குள் தாங்களாகவே கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள்.

போலீசாருடன் வாக்குவாதம்

தொடர்ந்து கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு காலி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் முழுவதுமாக பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். அப்போது கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் 2 பேர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை குண்டுகட்டாக தூக்கி வந்து போலீஸ் வேனில் ஏற்றி விசாரணைக்காக மப்பேடு போலீஸ்் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கு கடை வைத்திருந்த பெண்கள் தங்கள் கடைகள் இடித்து அகற்றப்படுவதை கண்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நேற்று பேரம்பாக்கம் பஜாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.4½ கோடி என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story