ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து வர்த்தகம் செய்ய அறிவுரை
ரஷியா, உக்ரைன் இடையே போர் நடப்பதால் ஏற்றுமதியாளர்கள் பொறுமையுடன் காத்திருந்து அதன் பிறகு ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்
ரஷியா, உக்ரைன் இடையே போர் நடப்பதால் ஏற்றுமதியாளர்கள் பொறுமையுடன் காத்திருந்து அதன் பிறகு ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா ரஷியா வர்த்தக ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து ரூ.24 ஆயிரத்து 750 கோடிக்கு மருந்து, வேதிப்பொருட்கள், எந்திரங்கள், எலெக்ட்ரானிக், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், இரும்பு, எந்திர உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுபோல் ரூ.63 ஆயிரத்து 750 கோடிக்கு பெட்ரோலியம், கியாஸ், நகைகள், உரம், இரும்பு, காகிதம் ஆகியவை ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியா உக்ரைன் வர்த்தக ஒப்பந்தப்படி, இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு ரூ.3 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் மருந்து, எந்திரங்கள், ரப்பர், பிளாஸ்டிக், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரூ.19 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் சூரியகாந்தி எண்ணெய், உரம் உள்ளிட்டவற்றை உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
காத்திருக்க வேண்டும்
இந்தநிலையில் உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே தற்போது போர் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ரஷியா மீது அமெரிக்கா தடை விதித்திருப்பது ஏற்றுமதியாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. போர் நடந்து வருவதால் அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுமதியாளர்கள் பொறுமையுடன் காத்திருந்து வர்த்தகம் செய்ய வேண்டும். இந்தியாவில் இருந்து ரஷியா, உக்ரைனுக்கு ஆடைகளை ஏற்கனவே ஏற்றுமதி செய்துள்ளனர். அவை துறைமுகங்களிலோ, பயணத்திலோ உள்ளது. அந்த ஆடைகளை விரைவாக சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு சரக்குகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் போக்குவரத்து அல்லது கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் இழப்பை மத்திய அரசு அனுதாபத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும். அதுபோல் வெளிநாட்டு சொத்து காப்பீட்டு அமைப்பு வர்த்தக நிலவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story