இரணியல் அருகே மூதாட்டியிடம் நட்பாக பழகி ரூ.5 லட்சம், 4 பவுன் நகை அபேஸ்


இரணியல் அருகே  மூதாட்டியிடம் நட்பாக பழகி ரூ.5 லட்சம், 4 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:57 PM IST (Updated: 24 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

இரணியில் அருகே மூதாட்டியிடம் நட்பாக பழகி ரூ.5 லட்சம், 4 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை, 
இரணியில் அருகே மூதாட்டியிடம் நட்பாக பழகி ரூ.5 லட்சம், 4 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 மூதாட்டி 
இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு அருகே உள்ள கொல்லமாவடியை சேர்ந்தவர் தங்கசாமி. இவரது மனைவி ராஜரத்தினம் (வயது 70). தங்கசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 
அதன்பின்பு ராஜரத்தினம் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். மேலும், அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் உதிரியான கேக் பொடிகளை வாங்கி திங்கள்சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.
நகை, பணம் கொள்ளை
இவரிடம் கடந்த சில நாட்களாக  ஒரு பெண் அடிக்கடி கேக்குகளை வாங்கி செல்வார். இதனால், அந்த பெண்ணுக்கும் ராஜரத்தினத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 
சம்பவத்தன்று மதியம் அந்த பெண் ஒரு பையுடன் ராஜரத்தினத்தின் வீட்டுக்கு சென்றார். பின்னர், ராஜரத்னத்திடம்   நைசாக பேசி, அவரது கவனத்தை திசைத்திருப்பி படுக்கை அறைக்குள் புகுந்தார். தொடர்ந்து அங்கு, வீடு கட்டுவதற்காக பீரோவில் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம், ராஜரத்தினம் அணிந்திருந்த 4 பவுன் நகை ஆகியவற்றை  அபேஸ் செய்து விட்டு நைசாக தப்பி சென்றார்.
மறுநாள் ராஜரத்தினம் அணிந்திருந்த நகை மற்றும் பணம் மாயமாகி இருப்பதை அவருடைய மகன் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் வீட்டுக்கு வந்த மர்ம பெண் நகை, பணத்தை அபேஸ் ெசய்தது தெரிய வந்தது.  
தீவிர விசாரணை
இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், மர்ம பெண்ணை அடையாளம் காண அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 
மூதாட்டியிடம் நட்பாக பழகி வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story