புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது யார்?
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி
புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 282 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 533 பேரில் 82 ஆயிரத்து 976 பேர் வாக்களித்தனர். இது 65.06 சதவீதம் ஆகும்.
புதுக்கோட்டை நகராட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தம் 27 இடங்களில் அமோகமாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர்களில் 8 பேரும், அ.ம.மு.க., விஜய் மக்கள் இயக்கம் தலா ஒரு இடங்களிலும், 5 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
தலைவர் பதவி
நகராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவி மறைமுக தேர்தல் என்பதால் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் 22 பேர் பெண்களும், 20 பேர் ஆண்களும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க.வுக்கு கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. பெண் வேட்பாளர் அலங்கரிக்க உள்ளார்.
கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் போதே நகராட்சி தலைவர் பதவியை குறி வைத்து முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது குடும்பத்தில் பெண் உறுப்பினர்களை போட்டியிட வைத்தனர். தி.மு.க.வில் பெண் வேட்பாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தி.மு.க. நிர்வாகிகள் முகாம்
இந்த நிலையில் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக தி.மு.க. தலைமையிடம் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். இதனால் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று தெரியவில்லை. தி.மு.க. தலைமை யாரை அறிவிக்கும் என்பது பொறுத்து தான் தெரியவரும். வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற சென்னை சென்றனர். தலைவர் பதவியை தங்கள் வசமாக்க தி.மு.க. நிர்வாகிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். தங்கள் தரப்பில் ஆதரவை பெருக்கி வருகின்றனர். வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்கும் நிகழ்வு வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. வருகிற 4-ந் தேதி நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும்.
துணை தலைவர் பதவி
இதேபோல் நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும் அன்றைய தினம் நடைபெற உள்ளது. நகராட்சி துணை தலைவர் பதவியை பெற தி.மு.க.வில் வெற்றி பெற்ற மூத்த நிர்வாகிகள் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை தலைவர் பதவிக்கும் யார் வேட்பாளர் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும். தலைவர், துணை தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் வரை சென்னையிலேயே தங்கியிருக்க நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அறந்தாங்கி நகராட்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி உள்ளது. இந்த நகராட்சி 1977-ம் ஆண்டு உதயமானது. அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 128 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 69.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த தேர்தலில் தி.மு.க. 15 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 3 இடங்களையும், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க. 1 இடத்தையும், விடுதலை சிறுத்தைகள் 1 இடத்தையும் கைப்பற்றின. இதேபோல் அ.தி.மு.க. 3 இடங்களிலும், தே.மு.தி.க. 1 இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
கடும் போட்டி
நகராட்சி தலைவர் பதவி மறைமுக தேர்தல் என்பதால் அறந்தாங்கி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. மேலும், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் தி.மு.க. கவுன்சிலர்கள் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.
அறந்தாங்கி நகராட்சியின் 6-வது நகர்மன்ற தலைவராக அலங்கரிக்கப்போவது யாராக இருக்கும் என தெரிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
Related Tags :
Next Story