‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்று நோய் அபாயம்
மதுரை நாராயணபுரம் கேசவசாமி தெரு ஆவின் பாலகம் அருகில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. ஆதலால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி, மதுரை.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 13-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி, துரத்தி கடித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தும் போது அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
வெல்பாண்டி, ராமநாதபுரம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கழிவுநீர் செல்லும் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராதாகிருஷ்ணன், விருதுநகர்.
ரேஷன்கடை தேவை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆலங்குடியார் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரே ஒரு ரேஷன்கடை மட்டுமே உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பலரும் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் அன்றாட வேலை பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் பொருட்களுக்கு தட்டுப்பாடுகளும் ஏற்படுகிறது. அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதலாக ஒரு ரேஷன்கடை அமைத்து தர வேண்டும்.
ரவி, சிவகங்கை.
Related Tags :
Next Story