தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பழுதான அடிபம்பு மக்கள் அவதி
பென்னாகரம் ஒன்றியம் தட்டாரப்பட்டி கிராமத்தில் தர்மபுரி மெயின்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சாலையோரம் அடிபம்பு ஒன்று உள்ளது. இந்த பம்பில் அந்த பகுதி மக்கள் குடிநீர் எடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த அடிபம்பு பழுதாகி விட்டது. இதனால் சாலையை கடந்த சென்று வேறு பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வரவேண்டிய உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒன்றிய அதிகாரிகள் இதுதொடர்பாக தனிக்கவனம் செலுத்தி அந்த அடிபம்பு பழுதை சரிசெய்து அங்குள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தட்டாரப்பட்டி, தர்மபுரி.
குப்பைதொட்டி வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம்பட்டி ஊராட்சி எம்.நடுப்பட்டி கிராம பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் பகுதியில் குப்பைகளை கொட்டுகின்றனர். சிலர் சலூன்கடைகளில் இருந்து வெட்டப்படும் முடியையும் அங்கு கொட்டுகின்றனர். இதனை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், எம்.நடுப்பட்டி, கிருஷ்ணகிரி.
கிணற்றுக்கு தடுப்பு சுவர்
தர்மபுரி அருகே செட்டிக்கரை ஊராட்சி ஜே.வி.பாளையம் 23-வது வார்டில் சாலையோரம் உள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் அமைந்துள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கிணற்றுக்கு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், ஜே.வி.பாளையம், தர்மபுரி.
பொதுக்கழிப்பறை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற கந்தபுரிமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கூலிப்பட்டி மலையை சுற்றி வரும் பாதையில் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் அசுத்தம் செய்வர்களை தடுக்க அந்த பகுதியில் பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும்.
-ஊர்மக்கள், கூலிப்பட்டி, நாமக்கல்.
===
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு
தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருக்கும் கடைகள் நகராட்சி அறிவித்துள்ள இடத்திற்கு மேல் கூடுதல் இடங்களை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் போதுக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ், தர்மபுரி.
பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்கள்
சேலம் இளம்பிள்ளை பஸ் நிலையத்தில் வரிசையாக கார், ஆட்டோ மற்றும் சரக்கு வேன் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. மேலும் பயணிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்தி உள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்.
-சுரேஷ்குமார், இளம்பிள்ளை, சேலம்.
Related Tags :
Next Story